கேரளாவில் உள்ள சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 65 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு இன்று  வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு வழங்கப்பட உள்ளதையடுத்து சபரிமலை அமைந்திருக்கும் பத்தினம்திட்டா மாவட்டத்தில் போலீஸார் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை முதல் 2 மாத மகரவிளக்கு சீசன் தொடங்கி 2020 ஜனவரி 21-ம் தேதிவரை நடைபெற உள்ளது. தீர்ப்பு வெளியானபின் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க போலீஸார் முன் எச்சரிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டைப்போல் போராட்டம், வன்முறை, பஸ் மறியல் போன்றவை நடக்காமல் இருக்கப் பாதுகாப்புக்குக் கூடுதலாக ஏராளமான போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

2 மாதங்கள் நடைபெறும் சீசனில் போலீஸார் பாதுகாப்பை 4 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்கள். வரும் 15ம் தேதி முதல் 29-ம் தேதிவரை 2,551 போலீஸார் கோயிலைச் சுற்றிப் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்.2-வது கட்டமாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை 2,539 போலீஸாரும், டிசம்பர் 15 முதல் 29-ம் தேதிவரை 2,992 போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்.

டிசம்பர் 30 முதல் ஜனவரி 21-ம் தேதி வரையிலான முக்கியமான கால கட்டத்தில் கோயிலைச் சுற்றி பாதுகாப்புக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்.

ஒட்டுமொத்த போலீஸ் பாதுகாப்பு கூடுதல் டிஜிபி ஷேக் தார்வேஷ் ஷாகிப் மேற்பார்வையில் நடக்கிறது. 24 போலீஸ் கண்காணிப்பாளர்கள் இணை கண்காணிப்பாளர்கள், 112 துணை கண்காணிப்பாளர்கள், 264 ஆய்வாளர்கள், 1,185 துணை ஆய்வாளர்கள், 8,402 போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் தவிர 30 பெண் போலீஸ் ஆய்வாளர்கள் உள்பட 307 போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளார்கள்