கேரளாவில் சபரிமலை விவகாரத்தால்தான், தங்களுக்கு தோல்வி கிடைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகள் தோல்வி அடைந்தது. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழப்புழா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. பாஜகவின் வாக்கு சதவீதம் இத்தேர்தலில் கணிசமாக உயர்ந்தது. தேர்தல் தோல்வி குறித்து ஆராய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மத்திய கமிட்டியின் இரண்டு நாட்கள் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

 
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ‘சபரிமலை விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முடிவு, தேர்தலில் தோல்வியை அளித்துவிட்டது. குறிப்பாக, இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகியோர் சபரிமலைக்கு சென்றதுதான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை முதலில் ஏற்றுக்கொண்ட காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் பின்னர் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டன. இரு கட்சிகளும் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரம் தேர்தலில் எதிரொலித்தது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
கேரளாவில் தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூறி வந்தது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சபரிமலை விவகாரமே இடதுசாரிகள் தோல்விக்குக் காரணம் என்று ஏற்கனவே ஒப்புக்கொண்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் தோல்விக்கு சபரிமலை விவகாரத்தை கேரள அரசு கையாண்ட விதமே காரணம் என ஒப்புக்கொண்டுள்ளது.