ரசிகர் மன்றமாக ஆரம்பித்து தற்போது தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா வரை காலூன்றி உள்ள மக்கள் இயக்கத்தை நடிகர் விஜயிடம் இருந்து ஒட்டு மொத்தமாக எஸ்ஏசி கைப்பற்றியுள்ளார்.

திரையுலகில் அறிமுகமான விஜய் ஒரு நடிகராக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே அவருக்கு ரசிகர் மன்றம் துவக்கியவர் எஸ்ஏசி. அந்த ரசிகர் மன்றத்தின் நிறுவன தலைவராக தன்னை தானே அறிவித்துக் கொண்டார் எஸ்ஏசி. சென்னை சாலி கிராமத்தில் எஸ்ஏசி வீடு அருகே இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தான் விஜய் ரசிகர் மன்றத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள். இதன் பிறகு நடிகர் விஜய் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகு தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர் மன்றங்கள் உருவாகின.

ரஜினி ரசிகர் மன்றங்களுக்கு நிகராக விஜய் ரசிகர் மன்றமும் அனைத்து கிராமங்களிலும் துவக்கப்பட்டன. ரஜினி, விஜயகாந்த் பாணியில் விஜயும் தனது ரசிகர் மன்றம் மூலமாக நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். ஆனால் இந்த ரசிகர் மன்றத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் இயக்கமாக மாற்றினார் எஸ்ஏசி. அதோடு மட்டும் அல்லாமல் மக்கள் இயக்கத்திற்கு என்று கொடியையும் அறிமுகம் செய்தார். இப்படி விஜய் ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக உருவெடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு இணையாக வளர்ந்தது.

இந்த நிலையில் விஜய் – எஸ்ஏசி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தந்தை எஸ்ஏசியிடம் இருந்து பிரிந்து விஜய் தனிக்குடித்தனம் சென்றார். மேலும் தந்தையுடன் பேசுவதையும் விஜய் குறைத்துக் கொண்டார். ஆனால் விஜயின் மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவராக எஸ்ஏசி ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே மக்கள் இயக்க பணிகளை கவனிக்க புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவரை எஸ்ஏசி நியமித்தார். இவர் விஜய்க்கு நெருக்கமாகி எஸ்ஏசிக்கே போட்டியானார்.

இதனை தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தில் எஸ்ஏசியின் ஆதிக்கம் குறைந்தது. புஸ்ஸி ஆனந்த் வைப்பது தான் சட்டம் என்று ஆனது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் விஜய் மக்கள் இயக்கத்தை தற்போது எஸ்ஏசி கைப்பற்றியுள்ளார். விஜய் பெயரில் மக்கள் இயக்கம் இருந்தாலும் அதனை ஆரம்பித்தது எஸ்ஏசி தான். மேலும் பதிவு செய்யப்பட்ட போது விஜய் மக்கள் இயக்கத்தின் நிறுவனராக எஸ்ஏசி பெயரே உள்ளது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்திற்கு எஸ்ஏசிக்கே பதிவுச் சட்டப்படி உரிமை உள்ளது.

இந்த அடிப்படையில் தான் விஜய் மக்கள் இயக்கத்தை டெல்லியில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார் எஸ்ஏசி. இதில் விஜய்க்கு உடன்பாடு இல்லாத நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து எஸ்ஏசியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் சட்டப்படி அதற்கு முகாந்திரம் இல்லை என்பதை வழக்கறிஞர்கள் விஜயிடம் எடுத்துக் கூறியுள்ளனர். மேலும் நீதிமன்றம் சென்றாலும் கூட விஜய் என்கிற பெயரை பயன்படுத்த வேண்டுமானால் தடை பெற முடியும், ஆனால் இயக்கத்தை எஸ்ஏசியிடம் இருந்து மீட்க முடியாது என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இதனால் தனது பெயரை பயன்படுத்தி தனது தந்தை அரசியல் ரீதியாக லாபம் அடைவதை தடுக்கும் நோக்குடன் புதிதாக ரசிகர் மன்றத்தை ஆரம்பித்துள்ளார் விஜய். அகில இந்திய தளபதி விஜய் நற்பணி இயக்கம் என்கிற பெயரில் இந்த மன்றத்தை பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக விஜய் தன்னைத்தானே நியமித்துக் கொண்டுள்ளார். பொறுப்பாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ரசிகர் மன்றத்தை பதிவு செய்து தனது அதிகாரப்பூர்வ மன்றமாக மாற்ற விஜய் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

அதோடு மட்டும் அல்லாமல் ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகளாக இருந்தவர்களின் தனது ரசிகர்களை அப்படியே புதிய மன்றத்தின் நிர்வாகிகளாக்கியுள்ளார் விஜய். இது தவிர எஸ்ஏசி ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படுபவர்களிடம் இருந்து பதவிகள் பறிக்கப்பட்டு புதியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எஸ்ஏசி ஆதரவாளர்களின் பெயர் பட்டியலை பார்த்து விஜய் இவர்களை எல்லாம் நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பது நடக்கும் காரியமா? என மலைத்துப்போயுள்ளாராம்.