இந்த மக்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனம் செய்ய வேண்டும். அம்பேத்கரும் அயோத்திதாசரும் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும்.
பட்டியல் மற்றும் பழங்குடியின பிரிவு மக்களை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
மதமற்ற மண்ணின் மைந்தர்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பது குறித்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 என்று அழைக்கப்படும் இந்த மசோதாவின் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமான தொல். திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் மதமற்ற மண்ணின் மைந்தர்கள் ஆவர். இவர்களுக்கு எந்த மதமும் இல்லை; சாதியும் இல்லை. ஆனால், இந்துக்கள் பெரும்பான்மை என்பதற்காக இவர்களுக்கு இந்துக்கள் என சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்துக்கள் அல்ல
அதனால், இந்துக்கள் பட்டியலில் இந்த மக்கள் இணைந்து இருக்கிறார்கள். இது பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். அவர்களை பொருளாதார ரீதியில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மேம்படுத்தவும்; அவர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்கவும் துளி அளவுக்கூட அக்கறை செலுத்தவில்லை. ஆகவே, இந்த மக்களை இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரகடனம் செய்ய வேண்டும். அம்பேத்கரும் அயோத்திதாசரும் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களை பூர்வ பவுத்தர்களாக அறிவிக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

சாதி சான்றிதழ் கோரிக்கை
பழங்குடியின மக்கள் சாதி சான்றிதழ் பெறுவதில் பெரும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். கல்வியைப் பெறவும் வேலைவாய்ப்பு பெறவும் சாதி சான்றிதழை தர முடியாத சூழலில் உள்ளனர். எனவே, அவர்களுக்கு சாதி சான்றிதழ் எளிதாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்று நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசினார்.
