உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தேதியை அறிவித்தார். அதன்படி, ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 1.18 லட்சம் பதவிகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், உள்ளாட்சி தொடர்பான திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடைபெறுமா? நடைபெறாத என்ற ஐயம் இருந்து வந்தது. அதேவேளையில் உள்ளாட்சி தேர்தலை 2012 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு வைத்து கொள்ளலாம் என அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவந்தனர். 

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் வார்டு மறுவரையறை முழுமையாக முடியும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென திமுக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே உள்ளாட்சி தொடர்பான 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.