ஓ.பி.எஸ் ஆதரவாளர்களாக இருந்த மைத்ரேயன் தனித்து நிற்க, வலது கரமாக இருந்த கே.பி.முனுசாமியும் இப்போது அவரை விட்டு விலகி இருப்பதாக கூறப்படுகிறது.  

அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் நடத்திய தியானம் முதல் ஓபிஎஸ் கூடவே ஒட்டி உறவாடி வலம் வந்தவர் கே.பி.முனுசாமி. முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி ஜெயலலிதா காலத்திலேயே செல்வாக்கான அமைச்சராக வலம் வந்தவர். 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது இரண்டு இடங்களில் கோட்டைவிட்டது அதில் ஒன்று அன்புமணி வென்ற தருமபுரி தொகுதி. இதனால் கே.பி.முனுசாமியை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. 

சசிகலா குடும்பத்திற்கும் கே.பி.முனுசாமிக்கும் ஆகவே ஆகாது. ஜெயலலிதா இறந்து சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்றபோது முதன்முதலாக எதிர்த்தார் கே.பி.முனுசாமி. அதனால் தான் ஓ.பி.எஸ் தனியாக பிரிந்து வந்தபோது பன்னீர்செல்வத்துடன் பரவசமானார். 

ஓ.பி.எஸ் - எடப்பாடி அணிகள் இணைந்த பிறகும் ஓபிஎஸுடன் மட்டுமே தலைகாட்டினார் கே.பி.முனுசாமி. ஆனால், இப்போது இருவருக்கும் இடையில் பிரிவு உண்டாகி இருப்பதாக கூறுகிறார்கள். சில நாட்களாகவே ஓபிஎஸ் செல்லும் இடங்களுக்கு கே.பி.முனுசாமி செல்வதில்லை. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் செலவுகள் குறித்து ஓபிஎஸிடம் எடுத்துக் கூறி இருக்கிறார்.

ஆனால், அதை ஓபிஎஸ் கண்டுகொள்ளாமல் மகனுக்கு பதவி வாங்குவதிலேயே இருந்து விட்டார் ஓ.பி.எஸ். முனுசாமி ஓ.பி.எஸை விட்டு திடீரென விலகுவதற்கு முக்கிய காரணம் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றே தீருவது என்று ஒற்றைக் காலில் நிற்பது முனுசாமிக்கும் பிடிக்கவில்லை. சுயநலத்தோடு செயல்பட்டு வரும் ஓ.பி.எஸை நம்பி எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை எனக் கருதியே கே.பி.முனுசாமி விலகி விட்டதாக கூறப்படுகிறது. இப்படியே போனால், ஓ.பிஎஸுடன் அவர் மகன் கூட இருப்பாரா என்பது சந்தேகமே எனக் கூறுகிறார்கள் ஓ.பி.எஸின் அதிருப்தி ஆதரவாளர்கள்.