தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991-1996 காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், 2017ம் ஆண்டு, அந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா, இளவரசி  மற்றும் சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஆளுக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவிற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. 

இதையடுத்து, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். சசிகலா சிறையிலடைக்கப்பட்ட பின்னர், தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பல்வேறு அதிரடி மாற்றங்களும் பரபரப்பான சம்பவங்களும் அரங்கேறின. 

தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி அடுத்த ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், சசிகலாவின் சிறைத்தண்டனையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிவடையவுள்ளது. சசிகலா சிறையிலிருந்து வெளிவந்ததும் அதிமுகவில் பல அதிரடி மாற்றங்களும், தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்களும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே சசிகலா ரிலீஸ் ஆவார் என்பதால், அவரது ரிலீஸ் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான நரசிம்ம மூர்த்தி என்பவர், சசிகலாவின் ரிலீஸ் எப்போது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்பியிருந்தார். இவர் இதற்கு முன்னதாக, சசிகலாவை சிறையில் எத்தனை பேர் சந்தித்தனர் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வியெழுப்பி இருந்தவர். 

நரசிம்ம மூர்த்தி ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், சிறை கைதிகளின் ரிலீஸ் என்பது, பல்வேறு சிறை விதிமுறைகளுக்குட்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, சிறை கைதிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கியது. எனவே சசிகலா ரிலீஸ் ஆகும் தேதியை திட்டவட்டமாக தெரிவிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.