சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தெய்வ புலவர் திருவள்ளுவர் நினைவாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று அப்போதைய
குடியரசு தலைவர் பக்ருதின் அலி அகமது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்துவதற்கு வசதியாக பல்வேறு
அரங்கங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

திருவாரூர் தேரையே சென்னை மாநகருக்கு கொண்டு வந்ததுபோன்றும் காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து உயர்ந்து நிற்கும் வகையில் தேர் அமைக்கப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த வள்ளுவர்
கோட்டம், தற்போது பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. 

மேலும் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாகவும் புகார் எழுந்தது. வள்ளுவர் கோட்டத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே, வள்ளுவர் கோட்டம் விரைவில் மிக சிறப்பான முறையில் புதுப்பிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடந்த
ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வள்ளுவர் கோட்டம், புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு, தெரிவித்துள்ளார். வள்ளுவர் கோட்டம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்
என்றும், அதற்காக ரூ.85 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.‘

மேலும், பணியின்போது மரணமடையும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.