Rs.500 for cooker houses! Special Offer Dinakaran Gang!

ஆர்.கே.நகர் தொகுதியில், குக்கர் கோலம் வரையப்பட்டிருக்கும் வீடுகளுக்கு, டிடிவி தினகரன் தரப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால், காலை மாலை நேரங்களில் குக்கர் கோலங்களை அதிகளவில் காண முடிகிறது.

ஆர்.கே.நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்போடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனாலும், ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக
சென்னை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாது, ஆர்.கே.நகரில் இதுவரை லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

நூதன முறையிலும் அதாவது, ஆர்.கே.நகர் மக்கள் தங்கள் பொருட்களை அடகு வைத்திருக்கும் சேட்டு கடையில், அடகு பொருளின் சீட்டைக் கொடுத்தால், அதனை தினகரன் ஆதரவாளர்கள் மீட்டு கொடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் நிலவரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்த நிலை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. இதனை அடுத்து, டிடிவி தினகரன், தனது தேர்தல் பணிகள் திட்டத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வீட்டு வாசல்கள் மற்றும் படியில் குக்கர் கோலமிடும் வீடுகளுக்கு 500 ரூபாய் சென்று விடுவதாக கூறப்படுகிறது.

தினகரன் தரப்பில் இருந்து 500 ரூபாய் வருவதை அடுத்து, தொகுதியில் உள்ள பலரின் வீடுகளில் காலை, மாலை நேரங்களில் குக்கர் கோலத்தை பார்க்க முடிகிறது.

திமுக பிரமுகர்கள் வீடுகளைக் கவனித்துக் கொள்ளும்படி தினகரன் கூறியுள்ளாராம். ஒரு தெருவில் 900 வாக்காளர்கள் இருந்தால், அதில் 600 வாக்காளர்களைச் சரியாக தேர்வு செய்து கவனிக்க வேண்டியதை திருப்தியாக கவனிக்கவும் தினகரன் உத்தரவிட்டுள்ளாராம்.

அந்தந்த தெரு ஆட்களே வேலை செய்வது போன்று, வாக்காளர்களுக்குத் தேவையானதை கவனிக்கவும், முக்கியமானவர்களைத் தொகுதிக்கு வெளியில் வரவழைத்து கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அனுப்ப வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளாராம். தினகரனின் இந்த புது பிளான்... எந்த அளவுக்கு அவருக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...!