கோவையில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் யார் என்ற பட்டியலை கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். 

கோவையில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் யார் என்ற பட்டியலை கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தவும், பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தை வரவழைக்க கோரியும், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் வெளியூர் திமுகவினரை வெளியேற்றக் கோரியும், அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சதி நடக்கிறது. அதிமுக கொறடா வேலுமணிக்கு பிரச்சாரத்தின் போது பகிரங்கமாக மிரட்டல் விடுத்த திமுகவினருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக குண்டர்களை வெளியேற்ற அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கோவையில் ரவுடிகளை வெளியேற்ற எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோவையில் ரவுடிகளுக்கு ஆதரவாக மாநகர காவல்துறை செயல்படுவது கண்டனத்துக்குரியது. கோவையில் ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சனை உண்டாக்கித் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய நினைக்கும் தி.மு.க.வின் எண்ணம் பலிக்காது என்றார். இந்த நிலையில் அதன்படி கோவை ஏதோ தனி மாநிலம் என்பது போல எதிர் கட்சி தலைவர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் கோட்டை கோவை என்பதை திமுக தகர்த்து விட்டதால் எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். திமுக மீது பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தியது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். 9 மாவட்டங்களில் எப்படி நியாயமாக, நேர்மையாக, தேர்தல் நடந்ததோ அதே போலத்தான் நாளைய தினமும் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார். உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாகக் கடைபிடித்து ஆணையம் தேர்தலை நடத்த பணியாற்றி கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் யார் என்ற பட்டியலை கொடுத்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறினார். தேர்தல் தோல்வி அடையப் போவதை எதிர்பார்த்து முன்கூட்டியே காரணங்களை பழனிசாமி கூறிவருகிறார் என்றும் அவர் விமர்சித்தார்.