வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு மாதம்தோறும் தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

 

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அந்தப் பணம் விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல், 2 ஹெக்டேர் அளவுக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும். இந்த தொகை மூன்று தவணைகளில் தலா 2000 ரூபாய் என்று வழங்கப்படும். இதனால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அறிவித்திருந்தார்.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2000 ரூபாய் வழங்கும் தொகை மிகவும் குறைவானது. இது ஏழைகளுக்கு எந்த வகையிலும் பலனளிக்காது எனக் கூறி வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ’ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என அறிவித்து அதிரடி கிளப்பி உள்ளார். 

அந்த அறிவிப்பின்படி, ’’5 கோடி குடும்பங்கள், பலன் அடையும். குடும்பத்திற்கு 4 பேர் என்றாலும், 20 கோடி பேர் நேரடியாக இதனால், பலன் பெறுவார்கள். எனவே, எந்த வகையில் பார்த்தாலும், மத்திய பாஜக அரசு அறிவித்த, விவசாயிகளுக்கான, ஆண்டுக்கு 6 ஆயிரம் என்ற திட்டத்தை ஒப்பிட்டால் காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டத்தின்படி ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என்பது, வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்க கூடியது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை எளிதாக பூர்த்தி செய்து கொள்ள வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.