நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா 5 கோடி ரூபாயை கட்சியின் தலைமையிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று அ.ம.மு.க ரேட் பிக்ஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. இதே போலத்தான் நாடாளுமன்ற தேர்தலிலும் அ.ம.மு.க சார்பில் போட்டியிட தற்போது முதலே ஏராளமானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 5 பேராவது அ.ம.மு.க சார்பில் போட்டியிட ஆர்வம் காட்டுவது தினகரனுக்கு தெரியவந்தது. 

மேலும் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு தினகரன் தற்போதே வேட்பாளரை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன தான் தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும் தேர்தல் வேலை என்பது மிக முக்கியம் என்று தினகரன் கருதுகிறார். அந்த வகையில் தேர்தல் பணியில் அனுபவம் உள்ளவர்களைத்தான் தினகரன் வேட்பாளராக தேர்வு செய்வார் என்று சொல்லப்படுகிறது. மேலும் எம்.பி தொகுதியில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்பவர்களுக்கு தான் சீட் ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 அதுவும் சீட் வேண்டும் என்றால் முன்கூட்டியே 5 கோடி ரூபாயை தலைமையிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று ஒரு நிபந்தனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் ஐந்து கோடி ரூபாய் செலவு செய்வதாக கூறிவிட்டு சிலர் அந்த தொகையை செலவழிக்காமல் ஏமாற்றும் வாய்ப்பு  இருப்பதாக தினகரன் கருதுகிறார். எனவே ஐந்து கோடி ரூபாயை வேட்பாளர்களிடம் இருந்து பெற்று தலைமை கழக நிர்வாகிகள் மூலம் அந்த தொகுதியில் செலவழிக்கலாம் என்றும் கருதுகிறார். இதனால் 5 கோடி ரூபாய் செலவழிக்கும் திறன் உள்ளவர்களை தேடிப்பிடிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.