இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அந்த உரையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது நம்மிடம் பிபிஏ கருவிகளே கிடையாது. ஆனால் தற்போது, ஒருநாளைக்கு 2 லட்சம் பிபிஏ கருவிகளை நாமே உற்பத்தி செய்கிறோம். உலகத்துக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை ஏற்றுகிறது. கொரோனா பாதிப்பில் இருக்கும் நாம், யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியம். கொரோனாவால் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும். கொரோனாவை சமாளிக்க உள்நாட்டு உற்பத்தியே உதவி செய்தது. எனவே உள்நாட்டு உற்பத்தி, உள்நாட்டு வணிகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார். 

பொருளாதாரம், உட்கட்டமைப்பு, சிஸ்டம், மக்கள் தொகை, தேவை ஆகியவற்றில் சுயசார்பு பாரதமாக இந்தியா திகழ்வதற்கான திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாகவும் அதற்கான விரிவான திட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிப்பார் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு பாரத திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துவருகிறார். அப்போது, சுயசார்பு பாரத திட்டம் குறித்து விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், சுயசார்பு என்றால் உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதாக அர்த்தமல்ல; தன்னம்பிக்கையை அதிகரிப்பது என்று அர்த்தம் என்றார். 

அதன்படி, முதல் அறிவிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாத வங்கிக்கடன் வழங்குவதற்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்தார். 

எனவே, சிறு, குறு தொழில்நிறுவனங்கள், இந்த வசதியை பயன்படுத்தி அடமானம் இல்லாமல் கடன் பெற்று, தங்களது தொழிலை மேம்படுத்த முடியும். இதன்மூலம் 45 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும். கடன்பெற்ற நிறுவனங்கள் முதல் ஒரு ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை என்றார்.