நீலாங்கரையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில விவகாரத்தில் ரூ.3 கோடி கமிசன் கேட்டு மிரட்டியதாக திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் மீது பகீர் புகார் எழுந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்தவர் ஜோயல். செயல் வீரர் என்று பெயரெடுத்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தார். அவருக்கு உடனடியாக திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு எதிர்பார்த்தவரை திமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆக்டிவ் பாலிடிக்சில் இருந்து ஜோயல் ஒதுங்கினார்.

மேலும் தனது ரியல் எஸ்டேட் தொழிலை அவர் தீவிரப்படுத்தினார். குறிப்பாக சென்னை நீலாங்கரை பகுதியில் பல்வேறு நிலம் தொடர்பான பஞ்சாயத்துகளில் அவர் தலையிட்டதாக சொல்லப்படுகிறது. அண்மையில் தமிழகத்தில் மிகப்பெரிய ஊடக குழுமம் ஒன்று நீலாங்கரையில் பிரமாண்ட நிலம் ஒன்றை பேசியுள்ளது. 100 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிலத்தை அந்த ஊடக நிறுவனத்திற்காக ஜோயல் தான் பேசி முடித்ததாக சொல்கிறார்கள்.

இதற்காக 3 சதவீத கமிசன் என்று பேசப்பட்ட நிலையில் பத்திரப்பதிவுக்கு முன்னதாக நிலத்தை விற்க முன்வந்த தரப்பு கமிசனை கொடுக்கவில்லை என்கிறார்கள். இதனால் அந்த நிலத்தை பத்திரப்பதிவு ஆகாமல் ஜோயல் தடுத்துவிட்டதாக கூறுகிறார்கள். உடனடியாக அந்த நிலத்திற்கு உரிமையாளர் என்று கூறப்படும் சிவக்குமார் ஜோயல் மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நில விவகாரத்தில் தனக்கு ஜோயல் கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் அளித்த புகாரில் மிகப்பெரிய ஊடக குழுமமும் தொடர்பில் உள்ளது. இதனால் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் திமுகவின் இளைஞர் அணி துணைச் செயலாளரை நில விவகாரத்தில் கைது செய்வது நமக்கு செம பூஸ்ட் என்று அதிமுக தலைமையை சிலர் வலியுறுத்தி வருகிறாரார்களாம். எனவே இந்த விவகாரத்தில் ஜோயலை கைது செய்ய முகாந்திரம் இருக்கிறதா? என விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.