பொங்கல் பரிசு ரூ. 2500-ஐ அரசு விழாவில் அல்லாமல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தது முறையா? இது பொங்கலுக்கு பரிசுத் தொகையா? வாக்குகளுக்கு முன்பணமா? என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிடுள்ள அறிக்கையில், “அதிமுகவின் சார்பில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக மக்களுக்கு வழக்கத்திற்கு மாறான அளவில் பொங்கல் பரிசு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு முதல்வராக செய்ய வேண்டிய அறிவிப்பை ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் செய்வது முறையா? இது அப்பட்டமான விதிமீறலாகும். இது மக்களுக்கான நலத் திட்டமா? அல்லது வாக்குகளுக்காக வழங்கப்படும் முன்பணமா? என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

புயலாலும் மழை வெள்ளத்தாலும் பாதிப்புக்கு ஆளாகி லட்சக் கணக்கான மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் பொங்கல் பரிசு அறிவித்திருப்பது கவனத்தைத் திசைதிருப்பும் ஏமாற்று வேலையாகும். எனவே, புயல்-மழை வெள்ள நிவாரணத்தை உடனே அறிவிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம். நிவர் மற்றும் புரெவி புயல்களாலும் அதனையொட்டிப் பெய்த பெருமழை வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் முற்றாக அழிந்து போயிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. தோட்டப் பயிர்களும் ஏராளமாக நாசமாகி இருக்கின்றன. இந்த மழை வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக வருகைதந்த மத்திய குழு, மத்திய அரசிடம் என்ன பரிந்துரை செய்தது? அதனடிப்படையில் மத்திய அரசு இதுவரை ஏன் பேரிடர் நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை? அதைப் பெறுவதற்கு தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு விளக்க வேண்டும்.

