இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர். முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “'கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டிகொடுங்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுங்கள் என்று பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதற்கெல்லாம் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மக்கள் பணத்தை எடுத்து பொங்கல் பரிசாக ரூ. 2500 அறிவித்திருப்பது தேர்தலுக்கான லஞ்சமே. பொங்கல் பரிசு மூலம் அரசியல் ஆதாயம் தேட முதல்வர் முயற்சிக்கிறார். முதல்வரின் இந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை அரசு மேம்படுத்தவில்லை. தற்போது விளம்பரத்திற்காக மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களும் ரேஷன் கடைகளும் இருக்காது. பணம் வைத்திருப்பவர்கள் விளைபொருட்களுக்கு செயற்கையாக விலை நிர்ணயம் செய்ய இச்சட்டங்கள் வழிவகுக்கின்றன. இந்தச் சட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவளிப்பது வேதனை.” என்று முத்தரசன் தெரிவித்தார்.