எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. MGR பாடலை பாடி ஜெயக்குமாரை விமர்சித்த திமுக எம்எல்ஏ..!
எம்.ஜி.ஆர். படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.
ராயபுரம் திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி முன்னாள் அமைச்சரும் அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெயக்குமார் குறித்து எம்ஜிஆர் பாடலை பாடினார்.
சட்டப்பேரவையில் செய்தித் துறை, கைத்தறி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறைகள் மீது மானிய கோரிக்கை விவாதம் நேற்று நடந்தது. அப்போது, சென்னை ராயபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி பேசுகையில்;- எம்.ஜி.ஆர். படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார். பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் வீழ்த்தி என்று பாடி பேசினார். தொடர்ந்து அவர் கடந்த 20 ஆண்டுகளாக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரை பற்றி தான் இப்போது பாடினேன் என்று விமர்சனம் செய்தார்.
இதற்கு உடனே அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூச்சலிட்டனர். அப்போது அவை முன்னவர் துரைமுருகன், பொதுவாக அவையில் இல்லாதவர்கள் பெயரை சொல்லக்கூடாது. அப்படி சொல்லியிருந்தால் அவற்றை எடுத்து விடலாம். ஆனால் உறுப்பினர் யார் பெயரையும் சொல்லவில்லை என்றார். இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அமைதியாக அமர்ந்தனர்.