அதிமுக செயற்குழு முடிந்த பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 5 பேர் மட்டும் மூடிய அறைக்குள் சென்று நடத்திய ஆலோசனையை தொடர்ந்தே 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளர் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூடிய அதிமுக செயற்குழு எதிர்பார்த்தபடியே காரசார விவாதத்துடன் நடந்து முடிந்துள்ளது. முதலமைச்சர் வேட்பாளர், பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து ஆலோசிக்கவே செயற்குழு கூட்டப்பட்டது. ஆனால் செயற்குழுவில் முழுக்க முழுக்க முதலமைச்சர் வேட்பாளர் குறித்தே விவாதிக்கப்பட்டது. அதிலும் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்றே பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர். ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக செயற்குழுவில் ஒரு சிலரை தவிர வேறு யாரும் பேசவில்லை. இதனை தொடர்ந்து தனக்காக தானே ஓபிஎஸ் பேசிய போது தான் எடப்பாடியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

முதலமைச்சர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று அதிரடியாக கூறினார் தங்கமணி. இதே போல் திண்டுக்கல் சீனிவாசனும் கூட எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் அமர்ந்து பேசி முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிவி சண்முகம் கூறியுள்ளார்.

அதே சமயம் அமைச்சர்கள் சிலர் யாருக்கும் எந்த ஆதரவும் தெரிவிக்காமல் அமைதி காத்தனர். அவர்கள் எந்த பக்கமும் செல்லாமல் நடுநிலை என்பது போல் அமர்ந்திருந்ததாக சொல்கின்றனர். இப்படி செயற்குழுவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று கூறி செயற்குழுவை கே.பி.முனுசாமி முடித்துள்ளார். இதன் பிறகு அங்கிருந்த தனி அறைக்கு முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் தங்கமணி ஆகியோர் மட்டுமே சென்றனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை உள்ளே ஆலோசனை நடைபெற்றது. அதனை தொடர்ந்தே கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளரை அதிமுக அறிவிக்கும் என்று கூறினார். அந்த தனி அறையில் அந்த ஐந்து பேரும் 20 நிமிடங்கள் என்ன பேசினார்கள் என்று பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.ஆனால் உள்ளே நடந்தவற்றை எடப்பாடி தரப்பில் இருந்து நேற்று முதல் லீக் செய்கிறார்கள். அதாவது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க வேண்டும் என்றால் தன்னை பொதுச் செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் நிபந்தனை விதித்ததாக சொல்கிறார்கள்.

அதற்கு பொதுச் செயலாளர் தேர்வு என்பது தேர்தல் மூலமே இருக்க வேண்டும் என்று அதிமுக சட்ட விதிகளில் இருப்பதை அப்போது எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த முறை பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிராகவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பொதுச் செயலாளர் விஷயத்தை மையமாக வைத்து சர்ச்சை எழுந்து யாரேனும் நீதிமன்றம் சென்றால் மீண்டும் இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள் என்றும் எடப்பாடி எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் தான் அந்த விஷயங்களை எல்லாம் தான் பார்த்துக் கொள்வதாக ஓபிஎஸ் கூறியதாகவும் அப்படி என்றால் பத்து நாட்களில் அந்த விஷயத்தை முடித்து தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியார் ஓபிஎஸ்சிடம் கறாராக கூறியதாகவும் சொல்கிறார்கள். அதாவது பத்து நாட்களில் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சிக்கு எடப்பாடி கெடு விதித்துள்ளதாக கூறுகிறார்கள். இதனை தொடர்ந்தே ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை அழைத்து அடுத்து என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறாராம்.