சென்னை கோயம்பேடு அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை நெற்குன்றம் பட்டேல் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரம்ம தேவனின் மகன் நாராயணன் (23). இவர் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் நாராயணன் நேற்றிரவு வீட்டருகே உள்ள சாலையோரக் கடையில் உணவருந்திவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் நாராயணனை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை, கால்களில் காயமடைந்த நாராயணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை கண்ட அவரது தந்தை வீட்டின் மாடியில் இருந்து கீழே ஓடி வருவதற்குள் அந்த மர்ம கும்பல்  மின்னல் வேகத்தில் தலைமறைவானது. 

இதனையடுத்து நாராயணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர், அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் கோயம்பேடு காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது, பின்னர் அங்கு வந்த அவர்கள் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான தனஞ்செயன் என்பவருடன் நாராயணனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது தெரியவந்தது தெரியவந்தது. 

இதன்காரணமாக தனஞ்செயன்தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை வெட்டி கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொலைக்கு வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.