சென்னை மயிலாப்பூர் சண்முகம் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் குமாரி(29). கடந்த 15 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சண்முகம் பிள்ளை தெருவில் நடந்த கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார்.

அப்போது கோவில் தர்மகர்த்தாவின் செல்போன் காணாமல் போனது, செல்போனை குமாரியின் உறவினரின் மகன் பிரேம் குமார் தான் திருடி சென்றுவிட்டதாக கூறிய ரவுடி சிவகுமார் என்பவரின் உறவினர்களான சாந்தி,  மற்றும் தேவி உட்பட பலர் இணைந்து பிரேம் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து குமாரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது  ஊர் தலைவர் சக்திவேல் இருதரப்பினரிடம்  சமரசமாக பேசி சமாதானமாக அனுப்பி வைத்தார். 

இந்த நிலையில் நேற்று மீண்டும் குமாரியின் வீட்டிற்குள் புகுந்த சாந்தி, ரஜினி, மற்றும் வினோத் உட்பட 8 பேர் குமாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இந்த ஏரியாவை விட்டே காலி செய்ய வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனையடுத்து  குமாரி,  ரவுடி சிவகுமாரின் உறவினரான சாந்தி தங்களது குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வருவதாகவும், ரவுடிகளை வைத்து அராஜகம் செய்து வருவதாகவும் கூறி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளிக்க சென்றார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விசாரிக்க சென்றனர். ஆனால் சாந்தி உட்பட அனைவரும் அங்கிருந்து தலைமறைவானார்கள். 

இந்த நிலையில் இன்று விடியற்காலை சாந்தியின் கூட்டாளிகள்  5 பேர் குமாரியின் வீட்டு  கூரைக்கு தீவைத்தனர், அதில் அவரது வீட்டு கூரை தீயில் எரிந்து நாசமானது. வீட்டிலிருந்த புடவைகள், ஆதார்கார்டு உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின. வீட்டிற்கு தீவைத்து விட்டு சுவர் ஏறி குதித்த போது அந்த கும்பலை சேர்ந்த தமிழ் என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சாந்தி, அய்யனார், அரவிந்தன், தமிழரசன், வினோத், கோபி ஆகியோரை போலீசார் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவகுமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.