Rotomac pen company load 4000 crores.cbi raid

 பல்வேறு வங்கிகளில் 4000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று திருப்பிக் கட்டாமல் விட்ட ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாயின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடனை அவர் திருப்பிக் கட்டாததால் இன்று அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோட்டோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளில் 4,232 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அந்த கடனை அவர், முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை என்று அவர்மீது வங்கிகள் குற்றம் சாட்டிவருகின்றன. விக்ரம் கோத்தாரி வழங்கிய 600 கோடி ரூபாய்க்கான காசோலை திரும்பிவிட்டது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புகார் அளித்துள்ளது.

இதுதொடர்பாக அவர்மீது எப்ஃஐஆர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், விக்ரம் கோத்தாரி வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார், தலைமறைவாகிவிட்டார் என்று செய்திகள் பரவின.

ஆனால், அதை மறுத்துள்ள விக்ரம் கோத்தாரி, 'நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை. கான்பூரில் எனது குடும்பத்தினருடன்தான் இருந்து எனது தொழில்களைக் கவனித்துவருகிறேன். கடன் விவகாரம் தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். இதுதொடர்பான விவகாரம் நடுவர் மன்றத்தில் உள்ளது. எனது காசோலை திரும்பி அனுப்பப்பட்டுள்ளதை காட்டுங்கள் பார்ப்போம் என்றும் என்மீது அவதூறு பரப்பப்படுகிறது. நான் நீதித்துறையை நம்புகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விக்ரம் கோத்தாரி வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோத்தாரி வங்கிகளில் எவ்வளவு கடன் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,400 கோடி ரூபாயும் அலகாபாத் வங்கியில் 352 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் இந்தியாவில் 1,395 கோடி ரூபாயும், பேங்க் ஆஃப் பரோடாவில் 600 கோடி ரூபாயும், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 485 கோடி ரூபாயும் கடனாகப் பெற்றுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி என்ற நகை வியாபாரி 11500 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிஓடிவிட்டார், அது தொடர்பாக முழு விவரம் கிடைப்பதற்குள் அடுத்த கடன் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.