தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசமைப்புச் சட்டப்படி நல்ல முடிவு எடுப்பார் என்று முன்னாள் ஆளுநர் ரோசய்யா நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் சசிகலா அந்த கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், முதல்வர் பன்னீர் செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கி சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவரின் தலைமையில் தனி அணியாக ஒரு பிரிவினர் செயல்பட்டு வருகின்றனர். ஏறக்குறைய 10 அதிமுக எம்.பி.க்கள், 5 எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம் பக்கம் அணி மாறி உள்ளனர்.

இந்த விவகாரத்தை மிகவும் கூர்ந்து கவனித்து வந்த தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா, சமீபத்தில் தெரிவித்த கருத்தில், “ பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.அதேசமயம், ஆளுநர் நல்ல முடிவு எடுக்க கால அவகாசம் எடுக்கலாம்'' எனத் தெரிவித்து இருந்தார்.


தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 100-க்கும் மேற்பட்டோர் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு இருப்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அது குறித்து பதில் அளிக்க ரோசய்யா மறுத்துவிட்டார்.
