விபத்து ஏற்பட்டு சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசா, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரியில், அதிமுக சார்பில் 90 ஜோடிகளுக்கு இன்று திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செயல்படாத ஸ்டாலினை, செயல் தலைவராக திமுகவினர் சொல்கின்றனர் என்றார். 

மக்களுக்காக உழைக்கும் அரசாக அதிமுக உள்ளது. அதிக போராட்டங்கள் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பவர்கள் அதிமுக ஆட்சியையும், கட்சியையும் வீழ்த்த முடியாது என்று கூறினார்.

தொண்டர்கள், மக்கள் ஒத்துழைப்போடு அதிமுக அரசு வலிமையாக உள்ளது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் பற்றி எதிர்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன. கமிஷன் கிடைக்கும் என்று பேசுகிறார்கள் இது முற்றிலும் பொய் என்று கூறியிருந்தார்.

இதன் பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் இருந்து காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர், வடசேரி என்னும் இடத்தில் ஏற்கனவே விபத்து ஏற்பட்டு காயமடைந்த இருவரை பார்த்தார். பின்னர், தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து, காயம்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சர் எடப்பாடியின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.