மதுசூதனன் மீதான மோசடி புகாரை ஊதிப் பெரிதாக்க முயற்சி செய்த காரணத்தினால் தான் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு மரண பயத்தை காட்டி அனுப்பியுள்ளனர். ஏற்கனவே மதுசூதனன் அமைச்சராக இருந்த போது போலி ஆவணங்கள் மூலம் தனது மனைவி பெயரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை பெற்ற புகார் உள்ளது. இந்த புகாரில் இப்போது இல்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் மதுசூதனுக்கு நிச்சயம் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மதுசூதனன் தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்தார். இந்த புகாரை ஜெயா பிளஸ் தொலைக்காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியது.
  இந்த நிலையில் தான் ஆர்.கே.நகர் சென்ற டி.டி.வி தினகரனை நோக்கி கற்களும், செருப்புகளும் வீசப்பட்டன. இதுநாள் வரை ஆர்.கே.நகருக்கு தினகரன் சென்று திரும்பும் போதெல்லாம் ஒரு 20 அல்லது 30 பேர் திரண்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கடந்த முறை தினகரன் தொகுதிக்கு சென்ற போது எதிர்ப்பு தெரிவித்த ஒரு சிலரை அவரது ஆதரவாளர்கள் நய்யப்புடைத்து அனுப்பினர். இதனால் இந்த முறை தொகுதிக்கு செல்லும் போது பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது என்று தினகரன் கருதினார்.ஆனால் தினகரன் தொகுதிக்குள் நுழையும் வரை பெரிய அளவில் மதுசூதனன் ஆட்கள் கூடவில்லை. ஆனால் தினகரன் கான்வாய் தொகுதிக்குள் வந்ததும் ஆங்காங்கே பிரிந்திருந்த மதுசூதனன் ஆட்கள் சுமார் 500 பேர் ஒரே இடத்தில் கூடினர். இது குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த காவல்துறை கூடுதல் போலீசாரை வரவழைத்து மதுசூதனன் ஆட்களை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.
   ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி மதுசூதனன் ஆட்கள் ஏராளமான கற்கள் மற்றும் செருப்புகளை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். தினகரன் கார் உள்ளே நுழைந்ததும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. திடீரென வானத்தில் இருந்து கற்கள் மழை பொழிந்தது போல் தினகரன் மற்றும் அவருடன் வந்த கார்கள் மீது கற்கள் படபடவென விழுந்தன. இதனால் காருக்குள் இருந்த தினகரனே ஒரு நிமிடம் ஆடிப்போனார்.பின்னர் தான் கற்கள் வீசப்பட்டதை அறிந்து துணிந்து உள்ளே சென்றுள்ளார் தினகரன். ஆனால் சுமார் 500 பேர் திரண்டு எதிர்ப்பார்கள் என்று தினகரன் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. மேலும் படபடவென பெரிய பெரிய கற்கள் திடீரென கார் மீது விழுந்ததில் தினகரனுக்கு நிச்சயம் உயிர் போய் உயிர் வந்திருக்கும் என்று சிரிக்கிறார்கள் மதுசூதனன் ஆட்கள். இதெற்கல்லாம் காரணம் மதுசூதனனுக்கு எதிரான புகாரை ஜெயா பிளஸ் பெரிதுபடுத்துவது தான் என்று சொல்லப்பட்டது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனும், கற்களை வீசியது மதுசூதனன் ஆட்கள் தான் என்றார். மேலும் அவர் மீதான புகாரை தங்கள் தொலைக்காட்சி பெரிதுபடுத்துவதால் தன்னை அச்சுறுத்தி பார்க்க மதுசூதனன் முயல்வதாதகவும் கூறியுள்ளார். ஆனால் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தினகரன் கூறினார். இருந்தாலும் திடீரென 500 பேர் திரண்டது, கல்வீச்சு போன்றவற்றால் தினகரன் சற்று பதற்றத்துடன் தான் இருந்தார்.