ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. ஜெயலலிதா மறைவினைத் தொடர்ந்து காலியான ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

82 வேட்புமனுக்கள் ஏற்பு

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுக அம்மா சார்பில் டிடிவி தினகரன் அதிமுக புரட்சித் தலைவி அம்மா சார்பில் மதுசூதனன், தே.மு.திக. சார்பில் மதிவாணன், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா உள்ளிட்ட 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று முடிவடைகிறது.

ரிப்பன் மாளிகையில் ஆலோசனை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்துவது குறித்து சென்னைா மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தேர்தல் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயர் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை? துணை ராணுவப்படையினரை எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, வாக்குப்பதிவை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஓட்டுச் சீட்டு மூலம் வாக்குப்பதிவு?

இதுவரை 82 வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால், நாளை மாலை தான் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகும்.

இதற்கிடையே ஒரு தொகுதியில் 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் அங்கு ஓட்டுச் சீட்டு மூலமே வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற விதி உள்ளது. இந்தச் சூழலில் 63 க்கும் அதிகமானோர் போட்டியிடும் பட்சத்தில் ஆர்.கே.நகரில் ஓட்டுச் சீட்டு மூலமே தேர்தல் நடத்தப்படும் என்று நம்பப்படுகிறது.