RK Nagar polls 57.16 percentage recording till 3 pm!
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 57.16 சதவீத வாக்குகள் பதிவிடப்பட்டுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்பட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 1,10,903, பெண் வாக்காளர்கள் 1,17,232, மூன்றாம் பாலினத்தவர் 99 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் தனது வாக்கினை இன்று காலை 8.05 மணியளவில் பதிவு செய்தார். தொகுதி முழுவதிலும் உள்ள 258 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் தங்கன் வாக்குகளை மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 10 மணி நிலவரப்படி 10.99% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இன்று பிற்பகல் 3.00 மணியளவில், ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு 57.16 சதவீதம் பதிவிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
