Asianet News TamilAsianet News Tamil

அடுத்து... ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான்..! நாளைக்கே அறிவிப்பு வெளியாகும்...!

rk nagar election date expected to be announced tomorrow
rk nagar election date expected to be announced tomorrow
Author
First Published Nov 23, 2017, 7:01 PM IST


தினகரன் தரப்பினரால் முட்டுக்கட்டைகள் பல கொடுக்கப்பட்டு, சவ்வாக இழுத்து இழுத்து  ஒருவழியாக இன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலை யாருக்கு என்பதை அறிவித்து விட்டது. அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உடைய எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் உள்ள அணிக்கே வழங்கப்பட்டுள்ளது. 

இதனால், இனி எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு, அதிமுக., கொடி, சின்னம், கட்சி அலுவலகம் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும், அதிமுக., பொதுச் செயலாளர் குறித்த விவகாரம் இன்னமும் சர்ச்சைக்குரியது என்ற நிலையில் உள்ளது. 

முன்னதாக, முதல்வராக இருந்த ஜெயலலிதா உயிரிழந்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது, பன்னீர்செல்வம் அணி தனியாக தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில், கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டு, ஓபிஎஸ்., தினகரன் இருதரப்புக்கும் இரு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம், தொகுதியில் பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்பட்டது இவற்றால் தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்தது. 

அதன் பின்னர், தேர்தல் நடத்துமாறு கோரிக்கைகள் வந்தபோதும், தேர்தல் ஆணையம் தள்ளிவைத்துக் கொண்டே வந்தது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்ன விவகாரமும் இடம்பெற்றதால், இரட்டை இலை கிடைத்த பின்னர் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று ஆளும் தரப்பும் இருந்துவிட்டது. இத்தகைய சூழலில் இன்று தேர்தல் ஆணையம் இரட்டை இலைத் தீர்ப்பையும் வழங்கிவிட்டது.  இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 டிச.31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாறிவரும் அரசியல் சூழலில் ஆளும் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னமும் கிடைத்து விட்டது. இத்தகைய சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆளும் தரப்புக்கு ஒரு அக்னிப் பரீட்சையாகத்தான் இருக்கும்.

இரட்டை இலை ஒன்றே வெற்றியைக் கொடுத்துவிடுமா என்பதும், ஆளும் அரசை மக்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பதும், தினகரன் என்ன முட்டுக்கட்டைகளைப் போடப் போகிறார், திமுக.,வின் வீச்சும் பேச்சும் எப்படி எடுபடப் போகிறது என்பதெல்லாம் இந்த இடைத்தேர்தலில் தெரிந்துவிடும்.

இத்தகைய பின்னணியில்,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தில்லிக்குச் செல்கிறார். தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் லக்கானி விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios