ஆர்.கே.நகர் தொகுதியில், இளம் புரட்சித்தலைவி தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களின் ஆதரவு தீவிரமாக, தீபாவுக்கு கிடைத்து வருகிறது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 5ம் தேதி காலமானார். இதைதொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பதவியேற்றனர். இதில் சசிகலா, பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு, அதிமுகவினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வரவேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி தினமும் ஆயிரக்கணக்கானோர், சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.

தொண்டர்களிடம், தீபா பேசுகையில், நான் நிச்சயம் வருவேன். அதற்கான காலம் விரைவில் வரும். அதுவரை தொண்டர்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதியில் ‘இளம் புரட்சித்தலைவர் தீபா அம்மா’ பேரவை புதிதாக துவங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஆர்கே நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதியில் அதிமுக பொது செயலாளர் சசிகலா போட்டியிடுவார் அல்லது சாத்தூரில் போட்டியிடுவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையில், ஆர்கே நகர் தொகுதியில் தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளதால், பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் இடையே சசிகலா ஆதரவாளர்கள், தீபா ஆதரவாளர்கள் என பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியில் தீபாவின் ஆதரவாளர்கள், பேரவையை துவக்கியுள்ளதால், அப்பகுதி அதிவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதேபோல், நாமக்கல்லில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் (அஅதிமுக) என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 24ம் தேதிக்குள் நாமக்கல் மாவட்டத்துக்கு நகர, ஒன்றிய பேரூர் மற்றும் குக்கிராமங்களில் அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு கிளை கழகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர். மேலும், இதற்கான உறுப்பினர் சேர்க்கையும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஈரோட்டில் எம்ஜிஆர் ஜெயலலிதா அதிமுக என்ற கட்சி உருவாகியுள்ளது. ஏற்கனவே தீபாவின் ஆதரவாளர்களுக்கு மிரட்டல்கள் வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது, ஆர்கே நகர் தொகுதியில் தீபா பேரவை துவங்கப்பட்டுள்ளதால், பெரும் சர்ச்சை ஏற்படும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.