rk nagar campaign will finish on tomorrow evening

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 19ம் தேதி(நாளை) மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடையும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

பணப்பட்டுவாடாவைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. பணப்பட்டுவாடா புகாரில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், நாளை மாலை 5 மணியுடன் பிரசாரங்கள் முடிவடையும். தேர்தல் நடத்தும் அலுவலரின் அனுமதி பெறாமல் தொகுதிக்குள் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 8 வெளியூர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வாக்குப்பதிவு நடந்து முடியும் 21-ம் தேதி மாலையிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 24-ம் தேதி வரை வாக்கு பெட்டிகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும் என தெரிவித்தார். மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் வாக்குப்பெட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். 

வாக்குப் பெட்டிகளை பாதுகாக்கும் பணியில், துணை ராணுவப்படையினர் பயன்படுத்தப்படுவர். மேலும் 500 காவலர்கள் பயன்படுத்தப்படுவர். தேவைப்பட்டால் கூடுதலாக காவலர்கள் பணியமர்த்தப்படுவர். வாக்குப்பதிவின் போது 2500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.