rk nagar campaign finish today

ஆர்.கே.நகரில் நாளை மறுநாள் (21ம்தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.

கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, தினகரன் ஆகிய ஒவ்வொரு தரப்பும் தங்களின் வலிமையை நிரூபிக்க போராடுவதால், இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஆர்.கே.நகர் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடந்த 17ம் தேதி முதல் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் அதில் தோற்றுவிடக்கூடாது, ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு இடைத்தேர்தலில் தோற்றுவிடக்கூடாது போன்ற கட்டாயங்களில் அதிமுக உள்ளது. எனவே அக்கட்சியின் வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முதல் முதல்வர் பழனிசாமி வரை அனைவருமே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திமுக, அதிமுக தீவிர பிரசாரத்திற்கு ஈடாக தினகரனும் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். 

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்தாலும், அவையனைத்தையும் மீறி தேர்தல் நெருங்கிவிட்டது. கடந்த முறை பணப்பட்டுவாடா புகார்கள் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால், இந்தமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற துடிக்கும் திமுக, அதிமுக, தினகரன் ஆகிய தரப்புகள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. 

இன்றே பிரசாரத்திற்கு இறுதி நாள் என்பதால், திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைவதால் அதற்கு மேல் வெளியூர் ஆட்கள் யாரும் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் தங்க கூடாது.