பீகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஜேடியூ அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு. எதிர் கூட்டணியாக ஆர்.ஜே.டி. - காங்கிரஸ் 110 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று நூலிழையில் ஆட்சியை இழந்தது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வஞ்சகத்தால் வெற்றி பெற்று விட்டது என்று ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் 3-ம் இடத்துக்கு சென்றுவிட்டார். அவர் தன்னுடைய மனசாட்சியை கேட்டுக்கொண்டு முதல்வர் பதவி ஆசையை விட்டுவிட வேண்டும். பீகாரில் ஆட்சி மாற்றத்தை மனதில் கொண்டுதான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பணபலம், ஆள்பலம், வஞ்சகத்தால் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது.  பீகாரில் போதிய எம்எல்ஏக்களை எங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை பிடிக்கலாமா என்பது பற்றி ஓட்டுப்போட்ட மக்களிடம் கேட்டுவிட்டு முடிவெடுப்போம்.


தேர்தலில் மகா கூட்டணியைவிட மொத்தமே வெறும் 12 ஆயிரத்து 270 ஓட்டுகள்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமாக வாங்கியுள்ளது. ஆனால், அதை வைத்து, எப்படி எங்களைவிட 15 தொகுதிகளில் அதிகமாக அக்கூட்டணி வெல்ல முடியும்? ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், நாங்கள் 130 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுத உள்ளோம். பல தொகுதிகளில், தபால் ஓட்டுகளை முதலில் எண்ணவில்லை. கடைசியாக எண்ணினார்கள். ஏராளமான தொகுதிகளில் 900 தபால் ஓட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்கள். அவையெல்லாம் எங்களுக்கு ஆதரவான வாக்குகள்.
எனவேதான், இதுபோன்ற தொகுதிகளில் தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண வேண்டும். அதை வீடியோ எடுக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் திருப்திகரமாக பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்துக்கு செல்வோம்.” என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.