river water the foam
கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் குவியல் குவியலாக சுமார் 30 அடி வரை நுரை தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான நந்திமலை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு தண்நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது அணையின் பாதுகாப்பு கருதி, கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேறிய நீரில், பஞ்சு போன்ற நுரைபொங்கி நீர் செல்லும் பகுதி முழுவதும் பரவி வருகிறது. இந்த நுரை சுமார் 30 அடி உயரம் வரை தேங்கியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தற்போது, இந்த நுரையை தீயணைப்பு படையினர், தண்ணீர் பீய்ச்சி அகற்றி வருகின்றனர். பெங்களூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும ரசாயனம் கலந்த கழிவு நீர், தென்பெண்ணை ஆற்றில் கலப்பதாலேயே கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரை பொங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுப்பதற்கு தெர்மகோல் கொண்டு மூட அமைச்சர் செல்லூர் ராஜு முயன்றார். திருப்பூரில் நொய்யல் ஆற்றில் பரவியுள்ள நுரை குறித்து அண்மையில் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், மக்கள் குளித்த கழிவுநீர்தான் காரணம் என்று கூறியிருந்தார்.
இது பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் பஞ்சு போன்ற நுரை பொங்கி வருகிறது. இது குறித்து அமைச்சர்களின் கருத்து என்னவாக இருக்கும்? என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
