ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். இவர், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம்  தன் தொகுதியில், 3 மாதங்களாக, தினமும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், கடந்த வாரம் இவரது மனைவி இளமதி (40) மற்றும் இளைய மகள்  மகன்யா(8) உள்ளிட்ட 3 பேருக்கு இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் பெரம்பலுார் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கும் சில அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது திமுக தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மற்றொரு திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனும் பாதிக்கப்பட்டுள்ளது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.