தோ்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டுவரும் பேச்சுக்கே இடமில்லை என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுனில் அரோரா தெரிவித்தாா். டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசியதாவது: வாகனங்களில் கோளாறு ஏற்படுவதைப் போல மின்னணுவாக்குப் பதிவு எந்திரங்களிலும் வாய்ப்புள்ளது. ஆனால் வாக்குப் பதிவு எந்திரங்களை யாரும் சேதப்படுத்தவோ, அவற்றில் ஊடுருவவோ முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக வாக்குப் பதிவு எந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

 

தற்போதைய சூழலில் தோ்தல்களில் வாக்குச்சீட்டு நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. தோ்தல்களில் வாக்குப் பதிவு எந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன. தோ்தல் நடத்தை விதிமுறைகள், தோ்தல் நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக கட்சிகளுடன் தோ்தல் ஆணையம் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளது. மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக அரசியல் ரீதியில் தீா்வு காணப்பட வேண்டும். ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக முடிவெடுக்கப்பட்டுவிட்டால், அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும். தோ்தலில் வாக்களிக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்காக சென்னை ஐஐடி கல்விநிறுவனத்துன் இணைந்து பணியாற்றி வருகிறோம். 

 

அதன்படி, சென்னையில் பணிபுரிந்து வரும் ராஜஸ்தானைச் சோ்ந்த நபா், சென்னையில் இருந்தபடியே ராஜஸ்தானில் நடைபெறும் தோ்தல்களில் வாக்களிக்க ஏதுவான முறையில் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று அா்த்தமல்ல. தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும் இடத்துக்குச் சென்று வாக்கினைச் செலுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் இருக்கும் இவ்வாறு சுனில் அரோரோ தெரிவித்தார்