இரட்டை மலை சீனிவாசன் 73-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சீமான், தந்தை பெரியாரை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.

தாத்தா என்று அழைக்கப்படும் இரட்டை மலை சீனிவாசனின் 73ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசியதாவது: அம்பேத்கர் அவர்களுக்கே சமூக நீதி வழிகாட்டியாக திகழ்ந்தவர் இரட்டை மலை சீனிவாசன்.

ஜாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கும், வருணாசிரமம் அடிப்படையிலான முரண்களுக்கும் எதிராக வாழ்நாள் முழுவதும் போராடியவர் இரட்டை மலை சீனிவாசன். இதே போல் அயோத்தி தாச பண்டிதரும் ஜாதியை ஒழிக்க தன் வாழ் நாள் முழுவதும் சிந்தித்தவர்கள். இவர்கள் எல்லாம் ஜாதிக்கு எதிராக போராடியது யாருக்கும் தெரியாது.ஜாதி ஒழிப்பு என்றாரே பெரியாரை தூக்கிக் கொண்டு ஓடி வந்துவிடுவார்கள்.

ஏதோ பெரியார் மட்டும் தான் ஜாதியை ஒழிக்க போராடியவர் போல, ஏன் இரட்டை மலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர் எல்லாம் இவர்கள் நினைவுக்கு வருவதில்லை? இப்போது கூட பாருங்கள் அரசு சார்பில் இரட்டை மலை சீனிவாசனுக்கு மரியாதை செலுத்த ஒருவர் கூட வரவில்லை. இதன் மூலமே தெரிந்து கொள்ளுங்கள். தமிழர்களில் ஜாதி ஒழிப்புக்கு எதிராக போராடியவர்களின் நிலை இது தான். இவ்வாறு சீமான் கூறியுள்ளார். இரட்டை மலை சீனிவாசனை சீமான் கொண்டாடுவது சரிதான். ஆனால் இந்த விவகாரத்தில் பெரியாரை சிறுமைபடுத்தும் விதத்தில் அவர் பேசியது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.