திமுக சார்பில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுக தொண்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. கிராமங்களில் திமுக பிரச்சாரங்களில் அரசு குறித்து தவறாக பேசினால், உரிய பதில் பிரச்சாரம் மூலம் அவற்றை முறியடிக்க அதிமுக தொண்டர்களுக்கான கையேடு ஒன்றை வெளியாகியுள்ளது.

திமுக பொய் பிரச்சாரமும் –அதிமுக பதிலடியும் என்கிற அந்த சிறிய நூலில் அதிமுக குறித்து திமுகவின் பொய் பிரச்சாரங்களும், அவற்றுக்கு புள்ளி விவரங்களுடன் பதில்களும் அளிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் அந்த வெளியீடு உள்ளது. உதாரணமாக, கடந்த எட்டு ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உயர்கல்விப் படிப்பில் சேர்ந்துள்ள பட்டியலின மாணவர்களின் விகிதம் மிகவும் குறைவாக (42.1%) உள்ளதாக திமுக பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேரும் பட்டியலின மாணவர்களின் எண்ணிக்கை, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் அதிகம். தேசிய சராசரி 23 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில், அது 41.6 சதவீதமாக இருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அரசு காலத்தில், கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 16,000 விவசாயிகளின் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைச் செய்து கொள்வது அதிமுக ஆட்சிக் காலத்தில் 77% அதிகரித்துள்ளது என திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், தேசிய குற்றவியல் துறையின் பதிவுகளின்படி (National Crime Record Bureau), தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை வெறும் 3,203 தான். ஆனால், திமுக இதை திரித்து 16,000 பேர் என பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மேற்கொள்ளும் பிரச்சாரத்துக்கும் பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு காரணமாக, தமிழகத்தில் இதுவரை 12 அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் வசதியற்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்பு பறிபோய் உள்ளதாக திமுக பிரச்சாரம் செய்கிறது.

ஆனால், திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்தபோதுதான் டிசம்பர் 21, 2010 இல் இரண்டு உத்தரவுகள் மூலம் நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட்டது. நீட் தேர்வை அறிமுகப்படுத்தி செயல்படுத்த உதவியாக இருந்தது திமுகதான். 12 அப்பாவி மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் திமுகதான் என தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், 2017 – 18 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்தது. அதையடுத்து, தமிழக அரசு, மருத்துவ கல்வியில் மாநில ஒதுக்கீட்டில் 85% இடங்கைளை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கி உத்தரவிட்டது. இதன் மூலம் நடப்பு ஆண்டில் சுமார் 300க்க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவராக உருவாக்கப்பட்டுள்ளனர். இப்படி பல புள்ளி விவரங்கள்சிறு வெளியீட்டில் விளக்கப்பட்டு உள்ளன. தேர்தல் அறிக்கை வெளி வருவதற்கு முன்னரே திமுகவினரின் பிரச்சாரங்களை முறியடிக்க, அதிமுக தயாராகிவிட்டதையே இந்த சிறு நூல் வெளிக்காட்டுவதாக அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.