அமைச்சர்கள் அனைவரும் கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை செயலகம் செல்வதால் மந்திரிகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர்.
6 நாட்களுக்கு பிறகு பரபரப்பான சூழ்நிலையில் முதன் முறையாக சட்டசபை செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு வழியெங்கும் ஆரத்தி எடுப்பது , பூரண கும்ப மரியாதை செலுத்த பொதுமக்கள் முடிவெடுத்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வர் பதவியை விட்டு இறங்கிய போது இடைக்கால முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பெரும்பாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் சென்று வந்தார். அப்போது வழியில் போவோர் வருவோர் , ஏன் ஒரு தடவை குடிமகன் ? ஒருவன் மறித்த சம்பவங்கள் எல்லாம் கிரீன்வேஸ் சாலையில் நடந்தது உண்டு.
அப்போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஓபிஎஸ் சிரித்தப்படி சென்று விடுவார். சமீபத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது முதலமைச்சர் காரை மக்கள் மறித்து விடுவார்கள் என்று கிரீன்வேஸ் சாலையில் செல்லாமல் பின்புறம் தாசில்தார் அலுவலகம் வழியாக செல்வார் ஓபிஎஸ்.

ஆனால் சசிகலாவுக்காக முதல்வர் பதவியை அளித்த பின்னர் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் அமர்ந்த ஓபிஎஸ் அளித்த பேட்டி நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வீடு திரும்பிய ஓபிஎஸ்சுக்கு வழியெங்கும் மக்கள் வாழ்த்து சொன்னார்கள்.
சாதாரணமாக 10 நிமிடத்தில் வீடு திரும்பும் முதல்வர் அன்று மக்கள் வாழ்த்து மழையில் நனைந்தபடி 40 நிமிடம் பயணம் செய்து கிரீன்வேஸ் இல்லம் வந்தடைந்தார். அதன் பின்னர் நடந்த நிகழ்வு ஓபிஎஸ்சுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கடந்த 6 நாட்களாக வீட்டில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் , இன்று தலைமை செயலகம் சென்று வழக்கமான தனது பணியை கவனிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் காலை 10 மணி அளவில் கிளம்பும் போது அவருக்கு வழியெங்கும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூசணிக்காய் , தேங்காய் உடைத்து வழியனுப்ப உள்ளதாகவும் முடிவு செய்துள்ளதாக கிரீன்வேஸ் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அம்மன் கோவில் விஷேஷமானது. ஓபிஎஸ் உள்ளிட்ட பல அமைச்சர்கள் விசேஷமாக கும்பிடும் கோவிலாகும். இந்த கோவிலின் சார்பில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமைசெயலகம் செல்லும்போது அவருக்கு பூரணகும்ப மரியாதை செலுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பொதுமக்களின் அன்பை பெற்ற ஓபிஎஸ்சுக்கு வழி நெடுக மரியாதை செலுத்தவும் ஆதரவு செலுத்தவும் பொதுமக்கள் உற்சாகமாக வழியனுப்பவும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இப்படி பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடு கோட்டைக்கு செல்லும் ஓபிஎஸ் அரசு அலுவல்களை முடித்த பிறகு செய்தியாளர்களை சந்திப்பாராம்.
அப்போது தன்னிச்சையாக நிருபர்கள் தரப்பிலிருந்து நீங்கள் மட்டும் தான் வேலை செய்கிறீர்கள்.. அமைச்சர்கள் யாரும் மக்கள்பணி செய்யவில்லையே? என கேட்க அதிக வாய்ப்புகள் உண்டு.
அப்போது அதை ஓபிஎஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம்.
மக்களின் பார்வைக்கே இதை விட்டு விடுகிறேன் என ஓபிஎஸ் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
ஓபிஎஸ் திடீரென தலைமை செயலகம் செல்வதை சற்றும் எதிர்பார்காத அமைச்சர்கள் மக்கள் பணி செய்யவில்லை என தங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் அதை எப்படி சமாளிக்க போகிறோம் என்பது புரியாமல் விழி பிதுங்கி போயுள்ளனர்.
ஓபிஎஸ்சை பொறுத்தவரை தனது கடமையாற்றுவது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் அமைச்சர்களுக்கு செக் வைப்பது என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்.
