மத்தியஅரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்கிற பா.ஜ.கவின் கோரிக்கையை உடனடியாக ஏற்க அ.தி.மு.க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்ற மக்களவையில் மோடி அரசு மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க தேவையான எம்.பிக்கள் பா.ஜ.க வசம் உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் மிரண்டு போகும் அளவிற்கு எம்.பிக்கள் ஆதரவுடன் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் மோடியின் விருப்பம். ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு பிறகு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்துள்ளது.  எனவே எதிர்கட்சிகள் அவமானப்படும் வகையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் பா.ஜ.கவின் வியூகம். இதற்கு கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்டவை ஒப்புக் கொண்டுவிட்டன. இருந்தாலும் சிவசேனா தற்போது வரை நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிவசேனா வராவிட்டாலும் அ.தி.மு.க வசம் உள்ள 37 எம்.பிக்களின் ஆதரவை ஒட்டு மொத்தமாக பெற வேண்டும் என்பது தான் பா.ஜ.கவின் தற்போதைய எண்ணம்.  ஏனென்றால் ஏற்கனவே தங்கள் வசம் உள்ள எம்.பிக்கள் மற்றும் அ.தி.மு.க எம்.பிக்களை சேர்த்தால் ஆதரவு எம்.பிக்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டிவிடும் என்று கணக்கு போடுகிறது பா.ஜ.க. இதற்காக அ.தி.மு.கவின் தலைமையை உடனடியாக பா.ஜ.க தொடர்பு கொண்டு நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், மேலும் எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.இது குறித்து டெல்லியில் உள்ள அ.தி.மு.க.நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருங்கள் என்று மட்டும் எடப்பாடி கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடைபெறும் வரை யாருக்கு ஆதரவு என்று கூறாமல் சஸ்பென்சில் வைத்திருக்க அ.தி.மு.க. முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இதுநாள் வரை ஐ.டி,. சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து நமக்கு ஆட்டம் காட்டிய பா.ஜ.க.விற்கு இனி நாம் ஆட்டம் காட்டுவோம் என்பது தான் அ.தி.மு.கவின் தற்போதைய நிலைப்பாடாக தெரிகிறது.