கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தினகரன் உருவப்படத்தை எரித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை, நீக்க வேண்டும் என்று, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்புக்குப் பிறகு எம்.பி.வைத்தியலிங்கம் கூறியிருந்தார். 

சசிகலாவால், நியமனம் செய்யப்பட் இ.பி.எஸ்., சசிகலாவை நீக்க முடியாது என்று டிடிவி ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவையும் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர்.

டிடிவி தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வந்த மாவட்ட கட்சி நிர்வாகிகள், மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் இன்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட சிலரை டிடிவி தினகரன் நீக்கம் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருப்பவர் மருதராஜ். முன்னாள் மேயரான இவர், ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டவர். நேற்று இவர், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஒரே மாவட்டச் செயலாளர் இருந்து வரும் நிலையில், கிழக்கு - மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரித்து, அதற்கு புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்தார் தினகரன். 

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரையும், மேற்கு மாவட்ட செயலாளராக நல்லசாமியும் அறிவிக்கப்பட்டனர். இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகளைச் சேர்ந்தவர்களிடையே அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

இந்த நிலையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியைச் சேர்ந்த அதிமுகவினர், திண்டுக்கல் எம்ஜிஆர் சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தினகரனின் புகைப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர்.

அதிமுகவை அழிக்க நினைக்கும் தினகரன் ஒழிக என அப்போது அவர்கள் கோஷமிட்டனர். தினகரனின் உருவ பொம்மையும் அப்போது அவர்களால் எரிக்கப்பட்டது.