10% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால் ஜெ. கொண்டு வந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல்? டிடிவி.தினகரன்..!
தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராது என்ற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது.
பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களின் மேம்பாட்டிற்கு அரசு உதவிட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
இதையும் படிங்க;- உயர்வகுப்பு இட ஒதுக்கீடு விவகாரம்... உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி மீதான தாக்குதல்... ராமதாஸ் கருத்து!!
ஆனால், அதற்காக சமூக நீதியின் அடிப்படையையே சீர்குலைப்பதுபோல நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பின்தங்கிய சமூகங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இரண்டு நீதிபதிகள் பட்டியலிட்டிருக்கும் காரணங்களை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ளலாம்.
மேலும், தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டு, அரசியல் சாசன பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராது என்ற வகையில் தீர்ப்பு அமைந்திருப்பது ஆறுதல் தருகிறது.
இதையும் படிங்க;- சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு.. முதல்வர் ஸ்டாலின்..!
அதேநேரத்தில், இந்த 10% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதிலும் சிக்கல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழக அரசு இதில் உறுதியாக நின்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றிட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் முறையான புள்ளிவிவரங்கள் இல்லாமல், அரசியல் காரணங்களுக்காக இத்தகைய இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். அதற்குப் பதிலாக, சாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி, அதற்கேற்ப இடஒதுக்கீட்டை வழங்குவதுதான் உண்மையான சமூக நீதியாகும் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- தீய சக்தி திமுகவை வீழ்த்த அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயார்? ஒரே போடாக போட்ட டி.டி.வி. தினகரன்..!