சட்டமன்றத்தில் மீண்டும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் மீண்டும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் நேற்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. இருந்த போதிலும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருந்த ( 2018 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102வது திருத்தமும், 2021ஆம் ஆண்டில் 105வது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா?, ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா?, அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?, சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?, வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா?, எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா? ) 7 கேள்விகளில் ஆறு கேள்விகள் தவறானவை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உள் ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசிடம் உள்ள தரவுகளை முறையாக சமர்ப்பித்தால் எதிர்காலத்தில் நிச்சயம் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எனவே தமிழக அரசு ஏற்கனவே இருக்கும் தரவுகளுடன் கூடுதல் தரவுகளை இணைத்து 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப்பேரவையில் மீண்டும் சட்டமியற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதங்கள் திருப்திகரமாக இருந்தது. மற்றவர்கள் சொல்வது போல அதிமுக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீடு சட்டம் அவசரகதியில் கொண்டுவரப்பட்டது அல்ல நீண்டகால கோரிக்கைக்கு பின்பு முறையான கொண்டு வரப்பட்டது.

தமிழக அரசு அனுப்பி வைத்த நீட் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் டோல்கேட் இருக்கக்கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே திமுக பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் நிர்வாகத்தில் தலையிடுவதை திமுக தலைவர் ஸ்டாலின் தடுக்க வேண்டும். சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக அனைவருக்கும் இலவசம் என அறிவிக்க வேண்டும். அதற்கு ஏற்ப தரமான 8000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
