reporters waiting till mid noon for congress leader thirunavukkarasar for his statement

பிரதமர் மோடி சென்ற வருடம் இதே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். அதன் மூலம் மக்கள் பட்ட சிரமங்களை நினைவு கூர, இன்று கறுப்பு தினம் என்று அறிவித்து நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது காங்கிரஸ்.

சென்னையிலும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தேர்தல் வந்தவுடன் பிரதமர் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். கருணாநிதியை பிரதமர் மோடி என்ன வேஷம் போட்டுப் போய் சந்தித்து வந்தாலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. சுவிஸ் வங்கியில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி சுருக்குப் பையில் இருந்து பணத்தை எடுத்துள்ளனர். ஜிஎஸ்டிக்கு பிறகு கந்து வட்டியை விட மோசமான வட்டியை பிரதமர் மோடி வசூலித்துள்ளார் என்று மோடி மீது குற்றம் சாட்டிப் பேசினார். 

முன்னதாக காங்கிரஸார் நடந்து கொண்ட விதம்தான் பத்திரிகையாளர்களை கடுப்பு அடையச் செய்தது.
காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுவதை ஒட்டி சென்னை சூளை தபால் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30க்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து, தொண்டர்கள் பலர் கொடியுடன் குவிந்தனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரோ பகல் 12 மணிக்கு மேல் ஆகியும் ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லை. 

இந்நிலையில், இந்த ஒரு நிகழ்வுதான் தங்களுக்கு இருக்கிறதா? இன்னும் எத்தனை அசைன்மெண்ட் இருக்கிறது. இந்த ஒரு நாளில்..! நாங்கள் ஏதோ இது ஒன்றுக்குத்தான் வந்ததாக இப்படி நேரம் ஆக்குகிறீர்களே.. கேட்டால் பதிலும் தரமறுக்கிறீர்களே என்று பத்திரிகையாளர்கள் கடுப்பு அடைந்தனர். 

சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகியும் திருநாவுக்கரசர் வராததால், குறைந்த பட்சம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரையாவது, இந்தக் கறுப்பு நாள் எதனால், என்ன கருத்து, கட்சியின் நிலைப்பாடு என்று பேட்டி அளிக்க வற்புறுத்தினர். ஆனால், கட்சிக்காரர்களோ அதையும் மறுத்தனர். இந்த ஒரு நிகழ்வுக்காக அரை நாள் காத்து இருக்கச் செய்யும் படி நடந்துகொள்வதுதான் காங்கிரஸ் தலைவர்கள் நடந்து கொள்ளும் முறையா என்று கேள்வி எழுப்பினர். காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று கூறும் காங்கிரஸார், ஆட்சிக்கு வந்தால் குறித்த நேரத்தில் மக்களை சந்திப்பார்களா எனக் கேள்வியும் எழுப்பினர். கறுப்பு நாள் யாருக்கு? காங்கிரஸுக்குத்தானா என்றபடி திருநாவுக்கரசர் வருகைக்காக காத்திருந்தது பரிதாபமாகத் தான் இருந்தது.