சட்டசபையில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை கவர்னர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவர் பிரணாப், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார்.
எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசிய திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பை,ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
இல்லாவிட்டால் ஒருவார காலத்திற்கு சபையை ஒத்தி வைத்து எம்.எல்.ஏக்களை சொந்த தொகுதிக்கு அனுப்பி பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம் என்று திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
இதை சபாநாயகர் தனபால் ஏற்காததால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது. சபாநயகர் மேசை உடைக்கப்பட்டது. மைக்கும் உடைக்கப்பட்டது. சபாநயகரை சுற்றி நின்று திமுக எம்.எல்.ஏக்கள் கேரோ செய்தனர். சபாநாயகரை கையை பிடித்து இழுத்து வெளியேற விடாமல் தடுத்தனர்.
இதன் பின்னர் சட்டசபையை ஒத்தி வைத்தார். அதன் பின்னரும் அமளி நீடித்ததால் திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார்.பின்னர் நடந்த வாக்கெடுப்பில் பழனிச்சாமி வெற்றி பெற்றார்.
சட்டசபையில் மார்ஷல் உடையில் போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட போலீசார் உள்ளே நுழைந்து தங்களை தாக்கியதாக திமுகவினர் தெரிவித்தனர்.
தன்னுடைய சட்டை கிழிக்கப்பட்டதை கவர்னரிடம் நேரடியாக காண்பித்த ஸ்டாலின் புகார் அளித்தார். பின்னர் கடற்கரையில் அறப்போராட்டம் நடத்தி கைதானார்.
திமுகவினர் புகாரை அடுத்து முழு விபரங்களை அறிக்கையாக கவர்னர் சட்டபேரவை செயலரிடம் கேட்டார் . திமுகவினர் அளித்த புகார் மற்றும் அவர்கள் நடந்து கொண்டதை சட்டப்பேரவை செயலர் கவர்னருக்கு விளக்கமாக வீடியோ ஆதாரத்துடன் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதை பார்த்த கவர்னர் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த தனது அறிக்கையை ஆளுநர் வித்யாசாகர் ராவ் குடியரசுத் தலைவர் பிரணாப், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் நாளை குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ள நிலையில் நேற்று அறிக்கையை கவர்னர் அனுப்பி வைத்துள்ளார். அதில் திமுக மீதும் சபாநாயகரிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி விமர்சித்தும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
