Removed the original voters name!

சென்னை, ஆர்.கே.நகரில் பல ஆண்டுகளாக வசித்து வரும் எங்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற தமிழக தேர்தல் அதிகாரி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவித்திருந்த நிலையில், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது.

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு கூறியது. இதனை அடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேட்பாளர் மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்கள் உள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிருந்தன. இதையடுத்து, வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, 45 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பாக கூறப்பட்டது.

இந்த நிலையில் உண்மையான வாக்காளர்கள் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக, தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

ஆர்.கே.நகரில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது எங்களுடைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட எங்களின் பெயர்களை மீண்டும் சேர்க்க முயற்சி செய்தோம். ஆனால் தேர்தல் பணியைக் காரணம் காட்டி எங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்களின் ஜனநாயக கடமையை ஆற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.