நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இது தொடர்பான  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுக்கக்கூடாது. 

சொத்துவரி உள்ளிட்ட வரிகளும் வசூல் செய்யக்கூடாது. நீர்நிலை, அதிலுள்ள ஆக்கிரமிப்பு மூலவரைப்பட நகலை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுப்ப வேண்டும். வரைபடத்தை பிப்ரவரி8 ஆம் தேதிக்குள்  சார்பதிவாளர், மின்வாரியம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றிய உத்தரவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பிப்ரவரி 13-ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.