தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் தொடர்கிறது என்பதற்கு சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் கூறியிருப்பது சான்றாக உள்ளது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருகிற 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் சாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்;- நான் எந்த பதவியையும் எதிர்பார்த்து கட்சியில் இருந்தது இல்லை. அவர்களாகத்தான் பதவியில் இருக்கச் சொன்னார்கள்.

இப்பொழுது கட்சி நிர்வாகிகள் முன்பே என்னை தரக்குறைவாக பேசுவதும் என்னை வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து உன்னை கொலை செய்து விடுவேன் என்று ஒரு அமைச்சரே 6 மாதமாக கொலை மிரட்டல் விடுத்து பேசி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை அதிமுக  எம்எல்ஏ முன்வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்;- தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம் தொடர்கிறது என்பதற்கு சாத்தூர் ராஜவர்மன் கூறியிருப்பது சான்றாக உள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிகாரபோதை செயல்கள் மக்களுக்கு தெரியும். அவரது கட்சியை சேர்ந்த எம்எல்ஏவே தனக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் தலையிட்டு அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து, பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.