அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பதவியில் இருந்து நவநீதகிருஷ்ணன் எம்பி நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அந்த பதவிக்கு அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதி கிருஷ்ணன் , நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதை கனிமொழி தனக்குக் கற்றுக் கொடுத்ததாக புகழ்ந்து பேசி இருந்தார்.
இந்தநிலையில் தற்போது அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாலே கட்சியில் இருந்து நவநீதிகிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். நவநீதகிருஷ்ணன் எம்பி நீக்கப்பட்டதையடுத்து அந்த பதவிக்கு அதிமுக வழக்கறிஞர்கள் இடையே கடும்போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
எப்போதுமே கட்சிகளின் வழக்கறிஞர் அணி செயலாளர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும். இப்போது கட்சியின் பெரிய தலைவர்களுக்கெல்லாம் எனக்கு அந்த இடம் வேண்டும் என்று அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர் பலர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் வழக்கறிஞர் அணி செயலாளர் பதவி காலியாக இருப்பது கட்சியினரை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சி.திருமாறன், கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாபு முருகவேல் ஆகியோர் இந்த பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றனர். மேலும் சில வழக்கறிஞர்களும் இந்த பதவிக்கு போட்டி போடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
