முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு, தனக்கு எதிராக செயல்படும் மாவட்ட நிர்வாகிகளை பொறுப்பில் இருந்து டிடிவி தினகரன் நீக்கம் செய்து வருகிறார். கோகுல இந்திரா உள்ளிட்ட பலரையும் கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். அதற்கு பதிலாக தனது ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் டிடிவி தினகரன் நியமித்தும் வருகிறார்.

டிடிவி தினகரன் கட்சியிலேயே இல்லாதபோது, அவரின் நீக்கம் செல்லாது என்று அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கூறி வருகின்றனர். மாவட்ட நிர்வாகிகள் நீக்கம் செய்வதால், அதிருப்தியடைந்தவர்கள் டிடிவி தினகரன் உருவபடத்தை எரித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், டிடிவி தினகரன், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக எஸ்.கே. செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சசிகலாவின் ஒப்புதலுடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.