டி.டி.வி.தினகரன் தொடங்கயுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தில் திராவிடம் இல்லை என்று கூறி அதிருப்தியில் இருந்த நாஞ்சில் சம்பத், தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி இலக்கிய மேடைகளில் தனனுடைய உரைடிய கேட்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை மேலூரில்  நேற்று முன்தினம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றை அறிவித்தார் டி.டி.வி.தினகரன். 108 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றியபோதும் மேடையில் கட்சியின் நிர்வாகிகள் பேசியபோதும், அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத்தின் முகம் தென்படவில்லை.

திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட காலத்திலிருந்து மாவட்டம்தோறும் கூட்டங்களை நடத்தி வந்த சம்பத், புதிய கட்சியின் தொடக்க விழாவில் தென்படாமல் இருந்ததை ஆச்சர்யத்துடன் கவனித்தனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்.

ஆனால் குரங்கணி தீ விபத்தில் அவருடைய உறவினர் இறந்துவிட்டதால் நாஞ்சில் சம்பத் அங்கு சென்றுவிட்டார் என காரங்கள் கூறப்பட்டன. ஆனால் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட மோதலால்தான் மதுரை வரவில்லை என பரவலாக பேசப்பட்டது.

புதிய அமைப்பின் தொடக்கவிழா ஏற்பாட்டின்போது, `மேடையில் தலைவருக்கு மட்டும்தான் இருக்கை போடப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்பட்டால், முன்வரிசையில் அமரலாம்' எனக் கூறிவிட்டனர். இதில் மிகுந்த கோபத்துக்கு ஆளாகிவிட்டார் சம்பத். 

மேலூர் கூட்டத்துக்கு வருமாறு பத்து முறைக்கும் மேல் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். கட்சிப் பெயரில் திராவிடம் இல்லாமல் இருப்பதை அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

அதே நேரத்தில்  தமிழ்நாடு முழுக்க பேச்சுப் பயிற்சியை வளர்க்கும் பணி  ஒன்றை நாஞ்சில் சம்பத் தொடங்க உள்ளார். அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக உள்ளார் என கூறப்படுகிறது.

திராவிடம் என்ற பெயர் இல்லாமல் கட்சி இருக்கலாமா? இதற்குத்தான் நான் வரவில்லை. நான் வெளியில் போகவில்லை; மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறேன்' என  தனக்கு நெருங்கி நண்பர்களிடம் நாஞ்சில் சம்பத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். தான் இருவரை சார்ந்திருந்த டி.டி.வி.தினகரன் தொடங்கியுள்ள கட்சியில் திராவிடம் இல்லை என்பதால் அங்கிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். அண்ணா, திராவிடம் என்ற சொற்களை விட்டுவிட்டு தன்னால் பேச முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

அதே நேரத்தில் இனி இலக்கிய மேடைகளில் தனது உரையை கேட்கலாம் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்,