Reliance Bureau of Companies Disclaimer for milk complaint about rajendra balaji
தனியார் பால் கலப்படம் குறித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகாருக்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்வதாகவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதாகவும், கூறி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்பரப்பை ஏற்படுத்தி வந்தார்.
இதற்கு பால் முகவர் சங்கம் கடுமையான எதிர்பு தெரிவித்தது. மேலும் இதுகுறித்த வழக்கில் எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிரூபணமாகவில்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
எனவே ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவியிலுருந்து விலக வேண்டும் என பால் முகவர் சங்கத்தின் பொன்னுசாமி கூறினார். அதற்கு அவர் பால் முகவரே அல்ல எனவும், அவரது சங்கம் ஒரு டூப்ளிகேட் சங்கம் எனவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
மேலும், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் பாலில் ராசாயனம் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
'நெஸ்லே எவ்ரி டே பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது. அதேபோல ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பவுடரிலும் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ரிப்போர்ட் வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட லேப்பில் நடத்தப்பட்ட, சோதனையில் இது தெரிய வந்துள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் குற்றச்சாட்டிற்கு ரிலையன்ஸ் பால் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்கள் பால் பவுடரை சோதனை செய்த நிறுவனம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் எனவும் ரிலையன்ஸ் பால் பவுடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நெஸ்லே நிறுவனமும் பால் கலப்பட புகாருக்கு மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
